Thursday, November 19, 2009

முல்லைஅமுதன்

ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.

ஈழத்தின் கல்வி,மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி, தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆக்கிரமிப்பு, இயல்பாகவே நடைமுறை வாழ்வியலின் ஏதுநிலை என நமது பெண் படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.

ஆமை நகர்வது போலவே பெண் படைப்பாளர்களின் வருகை 80 இற்குப் பிறகு நிகழ்ந்த அதிசயம் அதிக பெண் படைப்பாளர்களின் படைப்புக்களை நாம் படிக்க வாய்ப்பாகியது. மீனாட்சி நடேசையர் ,கோகிலம் சுப்பையா, குறமகள், பவானி ஆழ்வாப்பிள்ளை, யாழ்நங்கை, குந்தவை, கோகிலா மகேந்திரன், மண்டூர். அசோகா, நயீமா சித்தீக், தாமரைச்செல்வி... எனத் தொடங்கி சந்திரவதனா ,சந்திரா ரவீந்திரன் வரை நீள்கிறது. உள்ளக, வெளியக இடப்பெயர்வுகள் இவர்களது புதிய சிந்தனை விரிவாக்கத்துக்கு உதவியது. 83இற்கு பின்னரான இனக்கலவரம்,போராட்ட உணர்வு அல்லது போருக்குள் வாழ்கின்ற சூழல் இவர்களையும் ஆகர்சித்ததில் வியப்பில்லை.

இங்கு சந்திரவதனாவின் தாய்-தந்தையரின் அறிவூட்டல் இவருக்குள் ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கலாம். சூழலை அனுபவித்து, வாழ்க்கையை சரிவர உள்வாங்கி அதனை படைப்பில் தந்திருப்பது உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். எழுத்தும் வாழ்வும் ஒன்றாகி இவர் தருகின்ற பதிவுகள் சமூக வட்டத்தின் வரம்புகளை மீறாமல் வார்த்தைகள் சிதறாமல் எங்களுக்கு தந்த ‘மனஒசை’ இல் சிறப்பான சிறுகதைகளை வாசிக்க முடிந்திருக்கிறது. ஏற்கனவே ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வாசித்த உணர்வு இன்றும் என்னுள் ஞாபக விதைகளை விதைத்ததை உணரமுடிகிறது. என் தந்தையுடன் அவர் மாற்றலாகி சென்ற இடங்களில் நானும் என் தங்கைகளும் சிறு சிறு அசைவுகளையும்/ அமைவுகளையும் அனுபவித்து நுகர்ந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க வைத்த கதைகள் அனேகம். ஒவ்வொரு கதைகளை வாசிக்கும் போதும் என்னுள் எழுகின்ற உணர்வு என் வாழ்வின் கதைகளைப் போலுள்ளதாக உணர்கையில் எல்லா யாழ்ப்பணத்துக் கிராமங்களின் கதைகளே என உணர்த்தப்படுவது புரிகிறது. பருத்தித்துறை தொடங்கி நாகொல்லாகம ஊடாக ஜெர்மனி வரை தொடர்கிறது. பழகிய பாத்திரங்கள், ஊர்த் திருவிழா ஞாபகங்கள் வித்தியாசமான சிந்தனை, வார்த்தைகளை லாவகப்படுத்தும் திறமை இவருக்கு எல்லாமே கைகொடுத்திருக்கிறது. இதுவரை வாசித்த கதைகளூடாக நம்பிக்கையும், ஆரோக்கியமாகவும் ஈழத்து பெண் படைப்பாளர்கள் எழுதுகிறார்கள். இங்கு இவரும் அப்படியே. மொழிக்கு முழு உரிமையும் எழுத்தில் தந்திருக்கிறார். வாய்மொழிச் சொற்கள் ஆளுமையுடன் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. கனவு/கனவு காத்த வாழ்வு.. அது தருகின்ற சோகம் /வலிகள் என் போன்ற வாசகர்களை உள்வாங்குகின்ற நிகழ்வு நடந்திருக்கிறது.

இன்றைய பெண்களின் பெண்ணியம் சார்ந்த தவறான சிந்தனைகள் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டு. எனினும் வரம்புகள் மீறாமல் எழுதியது ஆறுதலைத் தந்துள்ளது.

ரயில் பயணம் அலாதியானது. அன்றைய யாழ்ப்பாணத்து யாழ்தேவி / மெயில் ரயில் பயணம் சுவாரஷ்யம் நிறைந்தது. வழியில் தெரிகின்ற மரங்கள், மனிதர்கள், தரித்து நிற்கிற போது வந்து முண்டியடித்த படி ஏறுகிற வியபாரிகள்/பயணிகள், சுதந்திரமாக பத்திரிகையை விரித்தபடி தூங்குகிற மனிதர்கள் அவ் அனுபவம் இப்போது இல்லை. ஐ டி கேட்டு பயமுறுத்தும் இராணுவம், ஆங்கங்கே பதிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.. இப்படி நிறைய அனுபவ வெளிப்பாடுகள் கதைகள் நம்மை உலுக்கிப் பார்க்கின்றன. சுதந்திரமாக எதுவும் இல்லைதான். முன்னால் நகர்கிற எதுவும் நீ அன்னியன் என்பதை சொல்லாமல் சொல்லுகிற செய்திகள்.

மனிதர்களால் நிச்சயிக்கப்பட்டு இணைகிற மனங்களுள் எழுகின்ற விரிசல்கள் ஒரு பேதையை மரணிக்க வைக்கிறது ‘வேஷங்கள்’ இல். புலம்பெயர் சூழலில் இயல்பாகவே ஆகிவிட்ட உறவுப் பிறழ்வு உமா மூலம் சாட்சியமாக்கப் பட்டுள்ளது.

சின்னச் சின்ன அனுபவ வெளிப்பாடுகளை, சில பயணங்களில் ஏற்படுகின்ற எரிச்சலூட்டுகிற சம்பவங்களை கோகிலா என்ற பாத்திரத்தின் மூலம் ‘பயணம்’கதையில் சொல்கிறார்.

‘கண்டவற்றை நாளும் கனவிற் …திண்டிறலிற் கென்னோ…’ திருவருட்பயன் தருகின்றதாயினும் உண்மையே. கண்முன்னே நிகழ்ந்த சம்பவங்களையே மனதிருத்தி எழுத்தில் தந்து எம்மைத் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இன்றைய பெண் படைப்பாளர்களின் சிந்தனை விரிவு பட்டிருக்கிறது. அனுபவம் என்பதே நேரடி/பிறரின் என வகைப்படுத்துகையில் இங்கு சந்திரவதனா தன் அனுபவங்களை ஆழமாக உள்வாங்கியிருப்பது சிறப்பைத் தருகிறது.

பெண் என்பவளே மென்மையானவள் தான். அந்த பெண்மையிலும் சீரிய சிந்தனைகள் பூக்கும் தான். இங்கு சிறுகதைகளாய்ப் பூத்திருகிறது.

தேனீர் குடிக்க வரச் சொல்லுகிறவனிடம் நாசூக்காய் நழுவுகின்ற கோகிலாவின் சாமர்த்தியம் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் அனுபவ வாயிலாகப் பெற்றிருக்கிறார்கள். ஊரில் ஊசியும், கொஞ்சம் மிளகாய்த் தூளும் அவர்களின் கைப் பையில் கொண்டு செல்லும் நம் ஊர் பெண்களை நினைத்துப் பார்கிறேன். இங்கு வாழ வேண்டிய சூழலில் தம்மை பழக்கப் படுத்திக் கொண்டுள்ளார்கள்.

உயரத்தில் இருந்து வீழ்ந்து மரணிக்கும் பெண்ணிலிருந்து பிற கதைகள் மாறினாலும் ஒரு மையப் புள்ளிக்கே வந்து நிற்கிறார்கள்.

பெண்ணின் மன வலி அவளுக்குத் தான் தெரியும். முகம் தெரியா ஆணுக்கு மாலை இடுவதும் அவனின் எல்லா சுகங்களுக்கும் / துக்கங்களுக்கும் அனுசரித்துப் போகின்றவளாக, விட்டுக்கொடுத்தபடி யாரோ வகுத்த சமூக வட்டத்துள்ளிலிருந்து வெளி வரமுடியாமல் தவிக்கின்ற பெண்ணின் மன நிலைக்கேற்றவாறு, ஊர் மாதிரி அம்மா வீட்டுக்கு பொதிகளுடன் வந்து இறங்காமல் தன் முடிவை தானே எடுக்கின்றவளாகவும், மகனுக்காக வாழ முடிவெடுக்கிறவளாகவும், முகம் தெரியாத ஊரில் யாரோ பொருத்தம் பார்த்து பார்சல் மனைவியாக வந்த ஒருத்தியின் வாழ்நிலை சிதறுகிற நிலையிலும் நிதானமாக முடிவெடுத்த பெண்ணின் மன உளைச்சல் அழகாக படம் பிடித்துக் காட்டப் பட்டிருக்கிறது. சங்கர்- கோகுல்- இந்து மூன்று பாத்திரங்களூடாக நம்மையும் நிமிர வைக்கிறார்.

ஊரின் நிகழ்வுகளுக்குள்/ இராணுவக் கெடுபிடிகள், இதர அச்சுறுத்தல்கள் இவற்றுக்குள் மத்தியில் தன் அக்கா பேசிய மாப்பிள்ளையுடன் வந்த சங்கவிக்கு தன் கணவன் சேகரின் இன்னொரு பக்கம் தெரிய வர, முதலில் தன்னைத் தானே சிறைப்படுத்தி வாழுதலில் இருந்து நிதானமாக தன் நாளை தீர்மானிக்கிறவளாக சங்கவி மாறுகையில் வரம்புகளை உடைக்க வைக்கிற சிந்தனை தெளிவு படைப்பாளரிடம் நிறையவே தெரிகிறது. வர்ணனைகள் அளவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு சேதியாக இளமையான புகைப்படங்களூடாக பெண்ணையும் அவள் சார்ந்த உறவுகளையும் ஏமாற்றுகிறதாக சேகர் பாத்திரமூடாக கோடிட்டுக் காட்டுகிறார். நிறைய கனவுகளுடன் வருகின்றவள் தன் வாழ்வு பற்றிய கனவுகள் உடைகையில் சீற்றம் கொள்வதை அழகாக புரியவைக்கிறார்.

தங்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த தாய் தந்தையரை புலம்பெயர் தேசத்துக்கு அழைத்து வந்து விட்டு அவர்களின் சுகதுக்கங்களை மறந்து உபகாரப்பணத்துக்காக வருத்துகின்ற கொடுமைகள் சோகம் தருகிறது. பாத்திரங்களை உள்வாங்குகிற அனுபவங்கள் அதை எழுத்தில் தருகிற ஆற்றல் எம்மை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. மொழியைக் கைக்குள் அடக்குகின்ற வல்லமை எதிர்கால சிற்பியின் இன்றைய தரிசனம் நமக்கு ‘மனஒசை’யைத் தந்துள்ளது.

கிராமத்து வாழ்நிலை/ போர்ச்சூழல்/ இந்திய-இலங்கை இராணுவ அடக்குமுறைகளால் சிதிலமாகிப்போன நிலையில் புலம்பெயர் தேசத்துச் சூழல் மாற்றத்தால் மனித மனங்களும் எப்படி மாறுகிறது என்பதும், தான் தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று வந்துவிட தாய் நாட்டை, தன் கலாச்சாரதை மறந்து வாழ்கிற மனிதர்கள்… புலம்பெயர் தேசத்து வாழ்க்கைக்கு அனுசரித்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஒரு பெண்ணை/படைப்பாளியை பாதித்திருக்கிறது. நம் முன்னே உலாவும் பாத்திரங்களையே நமக்கு படிக்க தந்திருகிறார். எழுத்தில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

நூலில் அச்சுப்பிழைகளைக் காணமுடியவில்லை. குமரன் பதிப்பகத்தாரின் அச்சும் அழகு சேர்க்கிறது.

முப்பது கதைகளூடு நம்மைப் போலவே நிறைய அனுபவங்களைப் பெற்றிருப்பார். ஆதலால் அவரிடமிருந்து இன்னொரு மனஒசையை எதிர்பார்க்கிறோம்.

முல்லைஅமுதன்
லண்டன்
Quelle - Tamilvisai