Monday, December 22, 2008

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.

சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.

மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.

ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரவதனாவும் அத்தகையவர்தான். 'எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத பொழுதுகளை எனது எழுத்துகளாற்றான் தேற்றியிருக்கிறேன்.' என அவரே தனது முன்னுரையில் சொல்கிறார். துன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் அதன் சுமையைக் குறைக்கிறார். மகிழ்ச்சியான கணங்களை பிட்டுத் தருகிறார்.

சந்திரவதனாவின் படைப்புலகம் எளிமையானது, அதன் நிகழ்வுகள் வாழ்வோடு ஒன்றியது. நாளந்தம் தம் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் அவரின் மனத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை கற்பனை மெருகூட்டாது, அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, நாகொல்லாகம், வவுனியா, மொஸ்கோ, ஜேர்மன், லண்டன், கனடா எனப் பயணப்பட்டுத் தேடப்பட்டு அவரது ஆழ்மனத்தில் உறைந்திருந்து மீட்கப்பட்ட புதையல்கள்தான் 'மனஓசை' என்ற சிறுகதைத் தொகுப்பு.

அங்கெல்லாம் சந்திக்கும் மக்களது, முக்கியமாக தமிழர் வாழ்வினைப் பதிவு செய்கிறது. ஆய்வாளனாக, சமூகவியலாளனாக, விஞ்ஞானியாக மனிதவாழ்வை சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கி பிய்த்துப் பார்க்கும் பார்வை அல்ல. ஒரு குடும்பப் பெண்ணின் பார்வை இது. அவளின் உள்ளுர் வாழ்வின் நினைவுகளையும், அதன் எதிர்மறையான புலம்பெயர் வாழ்வின் கோலங்களையும் தெளித்துச் செல்கிறது.

ஆத்தியடி வீட்டில் இருக்கும் பிச்சிப் பூவின் மணத்தில் கிறங்கும் அதே மனம் ஜேர்மனியின் பனியில் உறைந்த மரங்களிலும் லயிக்கிறது.

'காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் இருந்த காசல் நட்ஸ் மரம்';. பின்னர் 'இலைகள் மஞ்சளாகி ... இலைகளே இல்லாமல் மொட்டையாகி,' பின் 'பனியால் மூடப்பட்டு ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து பரந்து அழகாக....' என்கிறர் ஓரிடத்தில்.

ஆம் அவருக்கு வாழ்வை ரசிக்கத் தெரிகிறது. மனசு பூரித்து போதையாக நிறைந்து வழிகிற நேரங்களில் மட்டுமின்றி மனசுக்குள் சோகம் சுமையாக அழுத்தி துயர் சொரியக் கரையும் கணங்களிலும் கூட இயற்கையின் மேலான வாஞ்சையை, மனித உறவுகள் மீதான அக்கறையையும் பரிவையும் அவரில் காண முடிகிறது. இந்த வாலாயம் அனைவருக்கும் கை கூடுவது அல்ல.

யாழ்ப்பாணச் சமூகம் எவ்வளவு தூரம் தாங்க முடியாத சுமைகளையும் சுமந்த போதும் அவ்வளவு தூரம் அதிலிருந்து மீண்டு வாழவும் செய்கிறது.

தந்தையை இழந்தவர் எத்தனை பேர்?

தாயை, சகோதரங்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை என எவர் ஒருவரையாவது இழக்காதவர் அம் மண்ணில் இருக்கிறார்களா?.

அங்கங்களை இழத்தல், வீட்டை இழத்தல், தொழில் இழத்தல் என மற்றொரு பக்கம்.

அதற்கு மேலாக தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்போது? தாய் மண்ணிலிருந்து பிரிந்தேனும் புதுவாழ்வு பெற விழைகிறது.

அதற்காக அச் சமூகம் கொடுத்த, கொடுக்கிற விலை என்ன? 'சொல்லிச் சென்றவள்' சிறுகதை முதல் சந்திராவின் அனுபங்களாக விரியும் பக்கங்களுக்கு ஊடாக பயணப்படும்போது அந்தத் துயரங்களில் மூழ்கித் திணறும் நிலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படவே செய்யும்.

காதல் கல்யாணமே இன்றைய யதார்த்தம்.
உலகம் அதற்கு மேலும் சென்று விட்டது.

கல்யாணமின்றி சேர்ந்து வாழ்வதும், திருமணமாகாமலே குழந்தைகள் பெறுவதும், விரும்பங்கள் மாறினால் கட்டியவனை அல்லது கட்டியவளை பிரிந்து செல்வதும், ஒற்றைப் பெற்றாருடன் குழந்தைகள் வாழ்வதும் இன்று மேலைத் தேச வாழ்வுக்கு அன்னியமான செயற்பாடுகள் அல்ல.

இவ்வாறு இருக்கையில் 'புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எங்கோ வாழும் ஒருவனுக்கு மனைவியாவதற்கு தயாராவதும், ..... கண்ணாலே காணதவனை நம்பி வெளிநாட்டுக்கு ஏறிப் போக அங்கு அவன் சட்டப்படி கலியாணம் செய்யாது அல்லாட வைப்பதும், திருப்பி அனுப்ப முனைய அவள் நிரக்கதியாவதும் இப்படி எத்தனையோ அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறார்.

'பாதை எங்கே', 'விழிப்பு', 'வேசங்கள்', போன்றவை அத்தகைய படைப்புகள்.

'புலம் பெயர் வாழ்வின் பெண்கள் சார்ந்த அவலங்களை இவ்வளவு ஆழமாகப் பதிவு யாரும் பதிவு செய்யவில்லை' என்ற கருத்துப்பட இராஜன் முருகவேள் கூறியிருப்பதுடன் நானும் ஓம் படுகிறேன்.

அதே நேரத்தில் புலம் பெயர் வாழ்வின் இன்னொரு பக்கமாக, 'தீரக்கதரிசனம்' கதையில் வரும் ஒரு வயதான பாட்டாவின் வாழ்வில் மூழ்கும்போது எம் மனமும் கனடாவின் பனிபோல உறைந்து விடுகிறது.

'தாங்கள் காலமை வேலைக்குப் போற பொழுது தகப்பனை வெளியிலை விட்டு கதவைப் பூட்டிப் போட்டு போயிடுவினம்' மத்தியானம் சாப்பிடுறது, ரொயிலட்றுக்கு போறது எல்லாம் அவர்கள் வந்தாப் போலைதானாம்.

வீதியோரக் கல்லில் பனியில் உறைந்து, பசியில் துவண்டு, பேசுவதற்கும் ஆள் இன்றி ஒரு பிச்சைக்காரனைப் போல பரிதாபமாக அமர்ந்திருந்த யாரோ ஒரு பாட்டாவைப் பற்றிய தகவல் இது.

'அப்ப அவர் ஏன் இங்கை இருக்கிறார். நாட்டுக்குப் போகலாம்தானே' கதாசிரியர், கூட வந்த பிள்ளையிடம் கேட்கிறார்.

'அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகிதில்லோ'.

'சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பதாக' கதாசிரியர் கூறுகிறார்.

'வீட்டு காவல் நாய்கள் போல இருக்கிறம்' என அவுஸ்திரேலியா சென்ற ஒரு முதியவர் என்னிடம் முன்னொரு போது கூறியபோது மனம் வருந்தினேன்.

இவை யாவும் வெறும் கொடுமை அல்ல. பணத்தின் முன், சொகுசு வாழ்க்கைக்கு முன் மனித உணர்வுகளே இவர்களுக்கு மரணித்துவிட்டதன் வெளிப்பாடு.

நெஞ்சை உலுக்கும் நிலை இது.

பெண்ணியம் அவரது படைப்புகளில் கருத்துநிலை வாதமாகத் துருத்திக் கொண்டு நிற்பதில்லை. முக்கியமாக ஜேர்மனி நாட்டில் சில தமிழ்ப் பெண்கள் படும் அவலங்களை மிகவும் யாதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்.

'தாலியை நிதானமாகக் கழற்றி வைக்கும்' 'விலங்குடைப்போம்' கதையின் சங்கவி,

'என்னோடை ஒரு நாள் கோப்பி குடிக்க வருவியோ' என்ற கேள்வியோடு அதற்கு மேலானா சம்மதத்தைத் தேடும் ஆபிரிக்காரனை உறுதியோடு மறுக்கும் 'பயணம்' கதையின் கோகிலா ஆகியோர் சற்றுத் துணிச்சல்காரர்கள்.

ஆனால் அதே நேரம் 'என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?', 'ஏன்தான் பெண்ணாய்' போன்ற கதைகளில் வரும் பெண்கள் சாந்தமானவர்கள்.

குடும்ப வாழ்வில் தாம் தினசரி அடக்கப்பட்போதும் அதிலிருந்து வெளி வராமல் பொறுத்துக் கொள்ளும் பேதைகள். தங்களை மட்டும் யோசிக்காது குழந்தைகளையும் குடும்பத்தையும் நினைத்துப் அடங்கிப் போகும் அப்பாவிகள்.

உண்மையில் இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதுதான்.

கதைகளைப் படித்துவிட்டு உங்கள் வீட்டையும் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

'டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து ...' என ஆரம்பிக்கும் இந் நூலின் தலைப்புக் கதையான பொட்டு கிளாஸ் சாதீயம் பற்றியது. தாழ்த்ப்பட்ட சாதியினர் மீதான உயர்சாதிப் பெண்ணின் பரிவை எடுத்துச் சொல்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன், மற்றும் அவரது சகோதரி சந்திரா ரவீந்திரன் ஆகியோரை 80களின் ஆரம்பத்திலிருந்து அறிந்திருக்கிறேன். இவரது உலகின் ஒரு பகுதி எனது உலகமும் கூட.

அவரது வீடு எனது பருத்தித்துறை டிஸ்பென்சரியிலிருந்து எனது சொந்த ஊரான வியாபாரிமூலைக்கு போகும் பாதையில் இருக்கிறது.

அவரது படைப்புகளில் வரும் பாத்திரங்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எனக்கும் பழக்கமானவர்களே.

ஏனைய பல பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர்களே.

பல நிகழ்வுகளும் எனக்கும் அன்னியமானவை அல்ல.

இதனால் இவரது இந்த நூலைப் படிக்கும்போது அக் காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை மீள அசைபோடும் வாய்ப்பு கிட்டியது.

ஆத்தியடி பிள்ளையார் கோவில், நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில்.இவ்வாறு எவ்வளவோ!

நினைக்கும்போது எவ்வாறு எமது வாழ்வு சிதைந்து விட்டது. வாலறுந்த பட்டமாக, வேரறுந்த மரமாக அல்லாடுகிறோம் என்பது மனத்தை உறுத்துகிறது.

அவரது 'மன ஓசை' என்னையும் அல்லற்படுத்துகிறது.

யாழ் மண்ணோடு உறவு கொண்ட அனைவரையும் அவ்வாறே அல்லற்படுத்தும் என்பது நிச்சயம்.

சந்திரவதனா செல்வகுமாரன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமானவர். பல இணைய இதழ்களில் அவரது பல படைப்புகள் வெளியாகின்றன. தனக்கென பல வலைப்பதிவுகளையும் வைத்திருக்கிறார்.

மேலும் பிரகாசமான படைப்புலகம் அவர் பேனாவிலிருந்து ஊற்றெடுக்கக் காத்திருக்கிறது எனலாம்.

முப்பது கதைகளை அடக்கி 195 பக்கங்கள் நீளும் இத் தொகுப்பை குமரன் பிரின்ரேர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்- 14.12.2008
நன்றி:- எம்.கே.முருகானந்தன்

பதிவுகள்

பதிவுகள் வ. ந. கிரிதரன்