Thursday, July 17, 2008

இராஜன் முருகவேல்

திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களது முப்பது சிறுகதைகளை உள்ளடக்கிய நூல். மூனா அவர்களது முகப்போவியத்துடன் 196 பக்கங்களில் மிகவும் நேர்த்தியாக, ஆவணி 2007ல் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு.

இந்நூலிலே உள்ள சிறுகதைகள் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களது வாழ்வுடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகளின் பதிவுகள். அவர் அனுபவித்த உணர்வுத் தெறிப்புகளின் உக்கிரத்தில் எழுத்துக்களாக வெடித்துத் தெறித்த உணர்ச்சிப் பிரவாகங்கள் அல்லது தாங்க முடியாத உணர்வுகளின் வடிகால்கள்.

இந்நூலிலே, எழுத்தாளரே, 'தனது துயரத்தின் வடிகால்களாகவும், சில விடயங்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட கோபத்தின் தெறிப்புகளாயும், வர்க்க பேத எதிர்ப்புக்களாயும், மறுப்புக்களாயும், இயலாமையின் சொரிவுகளாயும், சந்தோசத்தின் படிவுகளாயும் வெளிப்பட்ட கோலங்களே இத்தொகுப்பிலுள்ள ஆக்கங்கள்' என்கிறார். இவை வெறும் கதைகளல்ல, தன்னைச் சுற்றியுள்ள எதார்த்தங்கள் என்றும் கூறுகிறார்.

உண்மைதான். இக் கதைகளை வாசிக்கும் போது.. இவை கதைகளல்ல என்ற உணர்வு எழுவதை என்னால் மறுக்க முடியவில்லை. அதேபோல ஒவ்வொரு வாசகனையும் இவ்வித உணர்வு ஆட்கொள்ளும் என்பது எனது எதிர்பார்ப்பு.

திருமதி சந்திரவதனா செல்வகுமாரனின் எழுத்துகளை அவ்வப்போது யேர்மனியில் இருந்து வெளிவரும் இனிய தமிழ் ஏடான பூவரசு சஞ்சிகை மூலம் வாசித்திருந்தாலும், அவரது பல ஆக்கங்களை இணையத்தளங்களின் வாயிலாகவே என்னால் அறிந்து வாசிக்க முடிந்தது. அதன் பயனாக, அவரது அனுமதியுடன் இருபத்தைந்து ஆக்கங்களை 'பதியப்படாத பதிவுகள்‘ எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக்கி, 'தமிழமுதம்‘ எனும் இணையத் தளத்தில் 30.10.2004 அன்று வெளியிட்டேன். அந்த இருபத்தைந்து ஆக்கங்களையும் மின்னூலுக்காக தட்டச்சு செய்யும்போது.. அவற்றை எழுத்துக்களாக வாசித்தேன். அப்போது அந்த ஆக்கங்களின் உணர்வுகளை உணர முடிந்தது.. அதனுள் அமிழ முடிந்தது.. இப்படியுமா எனவ அதிரவும் முடிந்தது.

திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் எழுத்துக்களுடன் நின்றுவிடவில்லை. தமிழில் 'வலைப்பூ‘ என அழைக்கப்படும் 'புளொக்‘கில் 20க்கும் மேற்பட்ட பக்கங்களை வைத்து விடாமுயற்சியுடன் இணையத் தமிழுக்கும் தனது சீரிய பங்களிப்பைச் செலுத்தி வருபவர்.

வாழ்வில் நிகழ்ந்த ஆறாத மனத் தழும்புகளை பல சிறுகதைகளாக எழுதும் ஆற்றல் நிறைந்த திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் முப்பது மனத் தழும்புகள் அல்லது மனை அதிர்வுகள் இங்கே முப்பது கதைகளாக, மன ஓசை என்னும் நூலாக உங்கள் முன்னே எழுந்து நிற்கின்றன.

இக்கதைகள் பலவற்றிலுள்ள சம்பவங்கள் ஏதாவது ஒன்றாவது எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் உண்டு. ஏனெனில் இவை அந்த அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட சம்பவங்களுடன் கதைகளாக எடுத்து வரப்பட்டுள்ள பதிவுகள்.

இவற்றின் பெறுமதி இன்னும் சில வருடங்களின் பின்னால் புலம்பெயர்ந்து வாழும் தமிழினத்தின் அடிவேரை ஆராய முற்படுவோருக்கு வெகுமதியாக தெரியும். யதார்த்தத்தை படைக்கும் எழுத்துக்கள்தான் வருங்காலத்தில் எமது அடையாளங்களைப் பகிரப் போகும் ஆவணங்கள். ஆகவே, இத்தகைய யதார்த்தத்துடன் கூடிய எமது வாழ்வியல் இலக்கியங்களை வரவேற்று ஊக்குவிப்பதன் மூலம், எமது வருக்காலத் தலைமுறைக்கும் அவர்களது அடையாளம் என்ன என்பதை விட்டுச்செல்லும் மகோன்னதப் பணிக்கும் வழிகோல முடியும்.

இராஜன் முருகவேல்
Wednesday, 14 May 2008

தமிழமுதம்

No comments: