Thursday, March 6, 2008

கரு வைகுந்தன்

சந்திரவதனாவின் மனஓசை கைக்குக் கிட்டியது.

வியர்க்க வியர்க்க ஓடியாடி விளையாடி விட்டு மாமரத்தில் கட்டித் தொங்க விட்டிருக்கும் ஊஞ்சலைக் கண்டு நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு, அதில் ஏறி ஆடும் போது காற்றுக்கு வியர்வை காய உடலில் ஒரு குளிர்ச்சி ஏற்பட்டு சில்லிட வைக்குமே அந்த உணர்வு இவரது சிறுகதைத் தொகுப்பைப் பார்த்ததும் வந்து போனது. கண்களில் எடுத்து அப்படியே ஒற்றிக் கொள்ளலாம் என்கின்ற வகையில் வர்ணத் தெரிவு அமைந்திருக்கிறது. அந்த ஊஞ்சலில் ஆடும் பெண் மனதுக்குள் பட்டாம் பூச்சிகளை சிறகடிக்க வைக்கிறாள். இப்படி இனிய நினைவுகளை ஏற்படுத்தி புத்தகத்துக்குள் நுளைய விட்டு நினைவு ஊஞ்சலில் எங்களை இருத்தி சந்திரவதனா மனஓசையை மெதுவாக சொல்லித் தருகிறார்.

முப்பது கதைகளை மனஓசையில் பதிந்திருக்கிறார். பொட்டு கிளாசில் தேனீரோடு வந்து வரவேற்கிறார். பதியப்படாத பதிவுகளோடு விடை கொடுக்கிறார். கதைகள் யாவும் தன்னைச் சுற்றி நடந்தவைகளே என்று ஆரம்பத்தில் இவர் குறிப்பிட்டிருப்பதால், நினைவுக் குறிப்பா, சிறுகதைத் தொகுப்பா என அதிகம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாமல் போய் விடுகிறது. சிறுகதைகளை சிறிய ஓவியங்கள் மூலம் பிரித்துக் காட்டி ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் ஆவலோடு அழைத்துச் செல்கிறார்.

தங்களைச் சுற்றி நடப்பவையை கருவாகக் கொண்டு தங்கள் கற்பனையையும் சேர்த்து கதைகளைப் படைக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், கற்பனைகளைக் கலக்காமல், தனது உணர்வுகளை அப்படியே எழுத்திலே தந்திருப்பதால், இவரது சிறுகதைப் பாத்திரங்கள் உயிரோடு எங்களது கண் முன்னால் நடமாடுவது போன்ற பிரமை ஏற்படுகிறது.

புலம் பெயர்ந்து வந்து சொந்தங்களை தொலைத்தவர்களின் சோகங்களுக்கும், தாய் நாட்டில் இருந்தவற்றை பறிகொடுத்து அதை தற்பொழுது வாழும் நாட்டில் தேடி அலையும் உறவுகளுக்கும் இந்த மனஓசையில் அதிகம் இடம் ஒதுக்கித் தந்திருக்கிறார். தனது சோகங்களையும், இயலாமைகளையும் எழுத்திலே தந்து தந்தையின் பாசத்திலும், தாயின் அணைப்பிலும், தம்பி, தங்கையின் அன்பிலும், மாமாவின் பரிவிலும், நண்பர்களின் நட்பிலும் இணைந்து பழைய நினைவுகளில் வாழ்ந்து பார்க்கிறார்; அத்தோடு எங்களது பழைய வாழ்க்கையையும் மீட்டிப் பார்க்க வைக்கிறார். அந்த வகையில் இந்த மனஓசை சக்தி வாய்ந்த ஓசைதான்.

நிலம், புலம் என்று இரு வெவ்வேறு தளங்களில் இருந்து தனது மனஓசையை தந்திருக்கிறார். ஊன்றிப் பார்க்கும் போது பெண்கள் சம்பந்தமான விடயங்களே இவரது கண்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கிறது. வசந்தம் காணா வாலிபங்கள் என்ற சிறுகதை தவிர அநேகமானவை பெண்களையும் இவரையும் (இவரும் பெண்தானே) சார்ந்ததாகவுமே புத்தகத்தில் காணமுடிகிறது. இடையிடையே மாவீரரான இவரது தம்பி மொறிஸ், கணேஸ்மாமா, வெள்ளை, ரவி என சிலர் வந்து போனாலும் தனது குடும்பப் பாசத்துக்கு முதலிடத்தையும், பெண்கள் பிரச்சினைகளுக்கு இரண்டாவது இடத்தையும், போனால் போகட்டும் என்று ஆண்களுக்கு வசந்தம் காணா வாலிபங்கள் என ஒரு சிறுகதை என்ற ஒரு இடத்தையும் தந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

புலத்தைத் தளமாகக் கொண்டு இவர் எழுதிய சிறுகதைகளில் ஆண்களை அநேகமான இடங்களில் கொடுமைக்காரர்களாகக் காட்டியிருப்பது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அவர்களும் தாய் சகோதரர்கள் எனப் பலதையும் தொலைத்தவர்கள்தானே? அவர்களின் ஆதங்கத்தை யார் எழுதப் போகிறார்கள்?

பருத்தித்துறை, ஆத்தியடி, பொலிகண்டி, நெல்லண்டை, வவுனியா, குருமன்காடு நாகொலகம, கொழும்பு, ரஸ்யா, ஜேர்மனி, கனடா என பலதரப்பட்ட இடங்களுக்கு இவரது சிறுகதைகள் எங்களை அழைத்துச் செல்கின்றன. நாங்களும் அந்த இடங்களில் இருந்து அந்த சம்பவங்களைப் பார்த்து விட்டு வந்தது போன்ற ஒரு எண்ணத்தை இவரது எழுத்துக்கள் தருகின்றன.

ஆறிலிருந்து அறுபது வரை என்பர்hகள். இவர் நாலில் இருந்து நாற்பது வயது வரை தந்திருக்கிறார் என நினைக்கிறேன். ஆக மனஓசை இரண்டாம்; பாகம் வர வாய்ப்பிருப்பது தெரிகிறது. எழுத்தும், அதனூடான எனது கருத்துக்களும் தொடரும் என்று பின் அட்டையில் சந்திரவதனா கண் சிமிட்டிச் சிரிக்கின்றார். தொடருங்கள். வாழ்த்துகள்

கரு வைகுந்தன்
மலேசியா
Fri, Feb 15, 2008 at 7:14 AM

No comments: